Friday, April 2, 2010

மழையோன் கவிதைகள்

1)

யாருடைய சாயலும் இல்லாமல்

எனக்கான கவிதையை

நான் எழுத வேண்டும்!

கடன் வாங்கா யாப்பு,

கடன் வாங்கா மொழிநடை என்று

எனக்கான கவிதை எழுத முயல்கிறேன்

யார் சாயல் அது?

முதல் எழுத்தை தொக்கி நிற்பது!

மீண்டும் புதிய சொல்லைத் தேடிப் பிடிக்க வேண்டும்.

முடிந்த மட்டும் எழுதுகிறேன்

எனக்கான கவிதையை நானே!

யாரேனும் படிப்பார்களா?

தெரியவில்லை!

பின் ஏன் எழுதவேண்டும்!

எனக்கான உறக்கம் போல!

முடித்துவிட்டேன்!

ஓ!

என்ன இது?

ஒவ்வொரு வார்த்தையும்

ஒவ்வொன்றை பறைசாற்றுகிறதே!

மீண்டும் எழுதவேண்டும்

எனக்கான கவிதையை நானே!!


2)

பறத்தல் என்பது

பறவைகளுக்கே என்றிருந்தேன்.

அன்பே!

அதை நீ பொய்ப்பித்தாய்!!


3)

உனக்கென்று

ஓரகராதி உருவாக்கும் ஆசை எனக்கு.

ஆனால்,

நீயோ பொருளை மாற்றிய வண்ணம் உள்ளாய்!

என் செய்வேன்!?


4)

முன்தினம்,

மழைத்தூறலில் நாம் நடந்த பொழுது,

நீ தேவதையனாய்!

நம்மை நனைத்த மழை

இன்னும் தூறிக் கொண்டிருக்கிறது

மனதில்!!


5)

நீர் அறம் நன்று;

நிழல் நன்று - நம்

இல்லுள் யாவும் நன்று,

சகியே,

நீ இருந்தால்


6)

இருந்தென்ன

நடந்தென்ன

கிடந்தென்ன

நீ ஏது செய்தாலும்

எனக்குள் சாரல் அடிக்கிறது!


7)

இனி

குழந்தைகள் முன் செல்லாதே!

சிறகில்லா தேவதை

ஊரில் உலவுவதாய்க்

கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=310032611&format=html