Monday, December 20, 2010

வாழையடி வாழை

தாத்தாவிற்குக்
கனவுகள் காண்பது பிடிக்கும்.
அவருக்குக் கனவுகள் ஊட்டப்பட்டது.

தாத்தா சில கனவுகளை
மிச்சம் வைத்தார்.
அப்பாவிடம் திணிக்கப்பட்டது.

பால்யத்தையும் இளமை காலத்தையும்
கனவுகளுக்காகத் தொலைத்தார் அப்பா.

அவை நிறைவேறாமல் போகவே
எனக்குப் பரிசளிக்கப்பட்டது.

என் மனதைத் தொட்ட அவை
மூளை வரை பரவி இருந்தது.
கனவுகளைப் பற்றிய கனவுகளில்
நெடுநாட்கள் மூழ்கி இருந்தேன்.

என் இளமைகாலத்தின் முடிவில்
என்னால் இயலாதெனத் தெரிந்து
நானும்
கனவுகளைச் சேமிப்பவன் ஆகிவிட்டேன்.


நன்றி : உயிரோசை

தீ அணைத்த மரம்

ஒரு மரத்தைத்
தீ அணைப்பது போலத்
தனிமை எனைச் சூழ்கிறது

எல்லா குரல்களும்
மனஅறைகளை உடைத்தவண்ணம்
உள்ளே விழுகிறது

ஒரு கோர்வை போலன்றி
முத்துக்கள் உதிர்வதைப்போல்
நினைவு வெளியில்
எல்லையற்ற சொற்கள்

சொற்கள்
தனிமையைக் குலைத்தெனை எழுப்புகிறது.
தனிமையை இழந்தால்
மன அறைகளும்
நினைவெளியும் உடன் தொலைகின்றன.
தனிமை எனைச் சூழட்டும்.
தீ அணைத்த மரம் எனக்கு விருப்பமானது

நன்றி : உயிரோசை

கூட்டமாகவே நகர்கிறோம்

கூட்டமாகவே நகர்கிறோம்
சாலையில்
பயில்வதில்
அலுவலில்
சமூகத்தில்
சிந்திப்பதில்
தலையும் காலும் கட்டப்பட்டு
புல்மேயும் ஆட்டைப் போல.

கூட்டமாய் நகர்தல் எளிதானது.
முன்னே பார்த்தல் மட்டும் போதுமானது.

முடிவில்லா நேர்க்கோடாகவும்
இணைகோடுகள் கொண்டதாகவும்
ஆங்காங்கே தனித்தியங்கும் புள்ளிகளையும் கொண்டதளமிது.
கோடுகள் இயல்பானதாயும்
புள்ளிகள் அயலானதாயும் எண்ணப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட பயணங்கள்
பாதை நெடுக
மின்கம்பிச் சுவர்களுடன்.
விலகுதல்தோறும் நிலைகுலையச்செய்கிறது.

புதியன பற்றிய கற்பனைகள்
பயத்தைத் தருவதாகவும்
நேர்தலின் விதிகள் மீறப்படுவதாகவும்
அச்சம் கற்பிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் இழிவெனும்பொழுது
இழிவென்பது இயல்பாகிறது.
இயல்பின் வரையறை புதுப்பிக்கப்படுகிறது.

நெருக்கப்படுகையில்
எதிர்ப்புறம் இடமிருக்க மகிழ்கிறது.
இல்லையெனில்,
சாதல் இயல்பென்று மரிக்கிறது.

செத்தொழியட்டும்

நன்றி : உயிரோசை