Monday, December 20, 2010

வாழையடி வாழை

தாத்தாவிற்குக்
கனவுகள் காண்பது பிடிக்கும்.
அவருக்குக் கனவுகள் ஊட்டப்பட்டது.

தாத்தா சில கனவுகளை
மிச்சம் வைத்தார்.
அப்பாவிடம் திணிக்கப்பட்டது.

பால்யத்தையும் இளமை காலத்தையும்
கனவுகளுக்காகத் தொலைத்தார் அப்பா.

அவை நிறைவேறாமல் போகவே
எனக்குப் பரிசளிக்கப்பட்டது.

என் மனதைத் தொட்ட அவை
மூளை வரை பரவி இருந்தது.
கனவுகளைப் பற்றிய கனவுகளில்
நெடுநாட்கள் மூழ்கி இருந்தேன்.

என் இளமைகாலத்தின் முடிவில்
என்னால் இயலாதெனத் தெரிந்து
நானும்
கனவுகளைச் சேமிப்பவன் ஆகிவிட்டேன்.


நன்றி : உயிரோசை

தீ அணைத்த மரம்

ஒரு மரத்தைத்
தீ அணைப்பது போலத்
தனிமை எனைச் சூழ்கிறது

எல்லா குரல்களும்
மனஅறைகளை உடைத்தவண்ணம்
உள்ளே விழுகிறது

ஒரு கோர்வை போலன்றி
முத்துக்கள் உதிர்வதைப்போல்
நினைவு வெளியில்
எல்லையற்ற சொற்கள்

சொற்கள்
தனிமையைக் குலைத்தெனை எழுப்புகிறது.
தனிமையை இழந்தால்
மன அறைகளும்
நினைவெளியும் உடன் தொலைகின்றன.
தனிமை எனைச் சூழட்டும்.
தீ அணைத்த மரம் எனக்கு விருப்பமானது

நன்றி : உயிரோசை

கூட்டமாகவே நகர்கிறோம்

கூட்டமாகவே நகர்கிறோம்
சாலையில்
பயில்வதில்
அலுவலில்
சமூகத்தில்
சிந்திப்பதில்
தலையும் காலும் கட்டப்பட்டு
புல்மேயும் ஆட்டைப் போல.

கூட்டமாய் நகர்தல் எளிதானது.
முன்னே பார்த்தல் மட்டும் போதுமானது.

முடிவில்லா நேர்க்கோடாகவும்
இணைகோடுகள் கொண்டதாகவும்
ஆங்காங்கே தனித்தியங்கும் புள்ளிகளையும் கொண்டதளமிது.
கோடுகள் இயல்பானதாயும்
புள்ளிகள் அயலானதாயும் எண்ணப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட பயணங்கள்
பாதை நெடுக
மின்கம்பிச் சுவர்களுடன்.
விலகுதல்தோறும் நிலைகுலையச்செய்கிறது.

புதியன பற்றிய கற்பனைகள்
பயத்தைத் தருவதாகவும்
நேர்தலின் விதிகள் மீறப்படுவதாகவும்
அச்சம் கற்பிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் இழிவெனும்பொழுது
இழிவென்பது இயல்பாகிறது.
இயல்பின் வரையறை புதுப்பிக்கப்படுகிறது.

நெருக்கப்படுகையில்
எதிர்ப்புறம் இடமிருக்க மகிழ்கிறது.
இல்லையெனில்,
சாதல் இயல்பென்று மரிக்கிறது.

செத்தொழியட்டும்

நன்றி : உயிரோசை

Monday, July 5, 2010

சலனங்கள்

புழுவைப் போல
சலனங்கள் எங்கும் நெளிந்து கொண்டிருக்கிறது.

யார்கரமேனும் பற்ற
மழைத்தவளையாக
தன்குரல் எழுப்பினதாய் அலைகிறது.
சலிப்படையும் ஒரு கணத்தில்,
பதற்றமுற்ற ஒரு கணத்தில்
நம்மைப் பற்றிவிடுகிறது.

கணத்தில் பற்றும் மௌனம் போலன்றி
சலனங்கள் நம்மைக் கையறுநிலையில் வைப்பதில்லை.
ஒரு கொடியாக
மனதெங்கும் படர்ந்து
செயலெல்லாம் வியாபிக்கிறது.

விடுபடுதல் என்பது எளிதன்று.
விடுபடுதல் என்பது இயல்பன்று.
விடுபடுதல் என்பது விலகுதலன்று.
விடுபடுதல் தொடர் செயல்
ஒரு புழுவின் வாழ்வைப் போல்.

உதறித்தள்ளியவை
சிறு அலைதலுக்குப் பின்
பிறிதொரு கரம் கிடைக்க நம்மை விளிக்கிறது.
எச்சங்கள் நம்மை விடுவதாய் இல்லை.
சலனங்கள் எங்கும் நெளிந்து கொண்டிருக்கிறது.

நன்றி : உயிரோசை http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3122

Monday, June 21, 2010

கேள்விகள்

அவன் இரண்டு கேள்விகள் வைத்திருந்தான்.
எதிர்ப்படும் எவரிடமும் கேட்டான்.

தொடர்பற்றதாகவும்
எளிதாகவும்
கேள்விகள் இருந்தன.
கேள்வியைப் போலவே
விடைகளும் எளிமையாக.

கேள்விகள் புரிந்தும்
கேளாதவர் போல் நகர்ந்தனர் சிலர்.
பதில் அறிந்தும்
சொல்லத் திராணியற்று நகர்ந்தனர் சிலர்.
மனம் வெம்பி
எதிர்கேள்வி கேட்டு நகர்ந்தனர் சிலர்.
கேள்வியிலே சிக்கி நின்றனர் சிலர்.

எவ்விதப் பதிலும்
எவரிடமிருந்தும் எழாத போது
தன்னிடமே வினவிக்கொள்ள
எஞ்சின இரண்டும் அவனிடமே.

நன்றி : உயிரோசை http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3048

Sunday, June 13, 2010

நிலவு

யாருமற்ற வெளியில்
வெளிச்சம் நெய்கிறது
தூக்கமற்ற நிலவு

Friday, June 11, 2010

நீளும் பொழுதுகள்

குமார் எழும்பொழுது சூரியன் உதித்து சில மணி நேரங்கள் கடந்திருந்தது. வெயில் முகத்தில் அடித்தது கூட தெரியாமல் தூங்கி இருந்தான். மெதுவாகப் போர்வையை மடித்து ஓரத்தில் இருக்கும் திண்டின் மீது வைத்து சுற்றிலும் பார்த்தான். நண்பர்கள் முன்பே எழுந்து சென்று விட்டனர் போல; யாரும் இல்லை. அது குமார் நண்பர்களுடன் வழக்கமாக உறங்கும் கோபி வீட்டின் மொட்டைமாடி. ஒன்பதாம் வகுப்பு சென்றது முதல் வீட்டில் தூங்கியதை விட மொட்டைமாடியில் தூங்கியதே அதிகம்.

வீட்டிற்குச் செல்லவும் மனம் தயங்கியது. அவனுக்குத் தெரியும், இன்றைய பொழுது தன்னுடைய வாழ்வின் மிக நீண்ட பொழுதுகளில் ஒன்று என்று. நேற்று இரவு ரவி தியேட்டர் அருகே இருக்கும் 'டாஸ்மாக்'கில் குமார் தன் நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது குமாரின் அப்பா சேகர் பார்த்துவிட்டார். அவனுக்குத் தெரியும், இப்பொழுது வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்று.

அவனுடைய கவலை அப்பா பார்த்தது அல்ல. தான் குடிப்பது அம்மாவுக்குத் தெரிந்துவிடுமே என்று தான். குமார் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு நெசவில் அமர்ந்துவிட்டான். அதற்கு மேல் படிக்க அவன் விரும்பவில்லை. படிப்பும் வரவில்லை. ஏதோ என்று +2 தேறி இருந்தான். படிக்கவில்லை என்றாலும் ஊதாரியாய் மகன் ஆகவில்லை என்ற எண்ணம் குமாரின் அம்மாவிற்கு. இன்று அதிலும் மண் விழும் போல.

குமார் எப்பொழுதும் மது அருந்தும் பழக்கம் உள்ளவன் அல்ல. தறி அறுக்கும் அன்று மட்டும் நண்பர்களுடன் செல்வான். மாதம் இரு பாவு நெய்துவிடுவான். நெசவைத் தவிர அவனுக்குத் தெரிந்தது சினிமா பாடல்கள் கேட்பது மட்டுமே. அவனுக்குத் தெரிந்த ஒரே பொழுதுபோக்கு அது தான்.

மணி பத்து ஆகி இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. கோபி வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளிதான் குமாரின் வீடு. அவனுக்கு அது மிகத்தொலைவாக இன்றுபட்டது. ஓர் ஊர்வன போல நெளிந்து கொண்டே சென்றான். அவனுக்கு அழகாய்த் தெரியும் கீதாவின் வீட்டை இன்று பார்க்காமல் தன்னுடைய வீட்டில் நுழைந்தான். நெருக்கமாகக் கட்டிய குடித்தன வீடுகள். சுவர் மட்டும்தான் வீடுகளுக்கு இடையே உள்ளது. மற்றபடி ஒரு வீட்டில் பாடல் இசைத்தால் பக்கத்து வீட்டில் கேட்குமளவிற்கே சுவரின் அகலம். எப்போதுமே நெசவின் சத்தம் கேட்கும் வீடுகள். எப்படி எழுத்தாளன் என்றால் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமோ அது போல நெசவின் சத்தமும். கேட்கவில்லை என்றால் பொழுதுகள் நகர்வதில்லை.

'ஏன் ராசா இவ்வளவு நேரமாச்சி?' - வீட்டில் இருந்து அம்மா கற்பகம். வாசம் வைத்தே கண்டுபிடித்துவிடும் அம்மா அவனுக்கு. அப்பா அடுத்த தறிக்கான நூலை நூற்றுக்கொண்டிருந்தார். குமாருக்கு எதுவும் சொல்ல எழவில்லை.

'பசிக்குதும்மா சாப்பாடு போடு' - இயல்பாய்ச் சொல்ல முயன்று அப்பாவைக் கடந்து 'டேப் ரிக்கார்டர்' அருகில் சென்றான்.

'தொர வந்துட்டார்ல.சாப்பாடு போடு' - CD எடுக்கும் முன்பே கேட்டுவிட்டது. அவன் தப்பிக்க வைத்திருந்த ஒரே வழியும் முடிந்தது. இனி பேச்செல்லாம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

'கற்பகம்! தொர நேத்து என்ன பண்ணான்னு கேளு'. அம்மாவை வேறு துணைக்கு அழைத்தது போல இருந்தது. 'எங்கே ராசா போனே?' என்றவாறு சாப்பாட்டுத் தட்டை வைத்தாள். அவன் சோற்றிற்கு மட்டும் வாயைத் திறப்பது என்ற முடிவில் இருந்தான். 'ஒடம்பு ஏதாச்சும் சரியில்லையா', நெற்றியில் கைவைத்துப் பார்த்தவாறு கற்பகம் கேட்டாள்.

'பாத்தியா? வாயத் தொறக்கிரானா பாரு' - குமார் தன் கேள்விக்குப் பதில் கூறாமல் அமைதியாய் இருந்தது அவன் அப்பாவிற்குத் தாங்கவில்லை. 'சேர்ந்த கூட்டம் அப்படி. ஒருத்தனாவது பன்னெண்டாவத தாண்டி இருக்கானா. கூட்டாளிகலாம் கூட்டாளி.திண்ணையில உக்காந்து வர்றவன் போறவன கேலி செய்ற கூட்டாளி.'

'அப்படி என்ன தான் ராசா பண்ணே அப்பா கோபப்படற அளவுக்கு?. அம்மாவுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்று நினைத்தான். அப்படியில்லை போல. இனி அவன் தனி ஆள்தான். அம்மாவின் துணை நிச்சயம் இம்மி அளவும் இருக்காது. தான் பேசி அம்மா சமாதானம் ஆகி அப்பாவை சமாதானம் செய்வாள் என்பது நடவாத செயல். பேசிப் பயனில்லை. எதாவது காரணம் சொல்லி இங்கிருந்து கிளம்ப வேண்டும்.

'நான் ஒண்ணும் செய்யலம்மா' - கிளம்ப வேண்டும் என்று மூளையில் ஓட்டம் இருந்தாலும் வாய் அதுவாகச் சொல்லிக்கொண்டது.

'ஒண்ணும் பண்ணலியாமே..ஒண்ணும் பண்ணலியாமே... நேத்துக் கூட்டாளிகளோடு சேர்ந்து குடிச்சி கும்மாளம் போட்டிருக்கான். இப்போ கேட்டா ஒண்ணும் இல்லையாமே.'. கேட்டதும் கற்பகம் செய்வதறியாது அதிர்ந்து நின்றாள்.

'அம்மா! அவர கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்றியா. நானே பசியில வந்தா' - பிடிக்காமல் எழ நினைத்தான். இவருக்கு வந்ததே கோபம். ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கச் செல்வதைப் போல தாவி குமார் பக்கத்திற்குச் சென்றார். தன்னை சட்டை செய்யவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு. கற்பகத்திற்கு 'குமாரு' என்று கத்த தான் முடிந்தது. குமார் இரண்டு அடி பின்னால் சறுக்கிச்சென்றான். போன வேகத்தில் சுவரில் கை முட்டி பட்டு வலி சுரீர் என்றது.

'அட நிறுத்துப்பா! நிறுத்து.வளர்ந்த பையன கை ஓங்குறதா' - பக்கத்து வீட்டு கணேஷ் உள்ளே வந்திருந்தார். சேகர் இயல்பு நிலைக்கு வரவேண்டியதாயிற்று. குடித்தனங்கள் நிறைய இருந்தாலே இதுதான் பிரச்சினை. பிரச்சினை அதே பிரச்சினையாக இருப்பதில்லை. அது தன் போக்கில் உருக்கொள்ளும்.

'இல்லண்ணே! இப்பவே இப்பிடி குட்டிச்சுவராப் போறானே' - அப்பா சொல்லும்போதே குமார் இதுதான் தருணம் என்று வாசல் பக்கம் நகர்ந்தான்.

'அட விடப்பா. நானும் கேட்டேன். இளவட்டம்னா அப்படித்தான் இருக்கும்.நல்லபடியா சொன்னா கேட்பாங்க.தம்பி அப்பா சொல்றத கேட்கலாம்ல'- சொல்லிக்கொண்டே குமாரைத் தேடினார் அவன் வாசல் கடக்கும் நேரம் பாத்து.

'பாத்திங்களா பாத்திங்களா. இவன் உருபடுவானா!' மீண்டும் குமாரின் அப்பாவிற்குக் கோபம் ஏறியது.

'ஆத்திரப்படாதப்பா! நாம பண்ணாததையா பசங்க பண்ணிடப்போறாங்க. நீயும் நானும் குடிக்கிறதில்லையா.நம்மள பாத்து தான் கெட்டுப்போறாங்க'. கணேஷின் வார்த்தைகளில் சேகரின் தன்மானம் அடிபட்டு செத்துக்கிடந்தது. இந்த முறை குமார் வாய்ப்பை நழுவவிடவில்லை. எதுவும் கேட்காமல் சென்றுவிட்டான்.

அவனுக்கு அந்த நேர விடுதலை தேவைப்பட்டது. திண்ணையிலோ தெருவிலோ உட்கார்ந்தால் நிச்சயம் மனித முகங்கள் எதிர்படும். ஆற்று மணலில் ஓய்வெடுக்கலாம் என்றால் மதிய வெயிலுக்கு மரணம்தான் சம்பவிக்கும். குமாருக்குத் தேவை கண நேர விடுதலை. தறி அறுத்துவிட்டதால் புதுப்பாவு ஆரம்பிக்கவே எப்படியும் ஒரு நாள் ஆகிவிடும். இன்றைய நாளைக் கடத்துவது அவனுக்கு எளிதாக இல்லை.

அவனுக்கே தெரியும் தன்னுடைய வருமானத்திற்குக் குடி என்பது எவ்வளவு ஆடம்பரம் என்று. அப்பாவை அம்மா திட்டுவதை எத்தனையோ முறை பார்த்துள்ளான்; கேட்டுள்ளான். அதை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. தான் குடிப்பதை அப்பா பார்த்து அது அம்மாவிற்குத் தெரிந்து பிரச்சினை ஆன போதுதான் அவனுக்கு அச்சம் அதிகமாகியது . இந்த சனியனை இனி தொடக்கூடாது என்று ஒருகணம் நினைத்தான். பின் ஏனோ முடிவெடுப்பதைப் பற்றி அவன் எண்ணம் செல்லவில்லை.

குடிப்பதா கூடாதா என்பது தற்போதைய பிரச்சினை அல்ல. தனித்து விடப்படவேண்டும். கேள்விகள் கேட்காத தருணங்கள் அவனுக்கு வேண்டும். சிறிது நேரம் வைகை ஆற்று மணலில் நடந்தான்.வெயில் தணலாய் இருந்தது. ஆற்றைக் கடந்து அக்கரை சென்றான். மனம் கொஞ்சம் வெம்மை தணிந்தது. எதிரே ரவி தியேட்டர். ஆம், நேற்று கொட்டம் அடித்த அதே இடம். இப்பொழுதும் அந்த மதுக்கடை இளித்துக் கொண்டு இருந்தது. அவனுடைய அமைதியின்மை மேலும் சீண்டப்பட்டது. ஒரே வழி தியேட்டருக்குள் நுழைவது தான்.

என்ன திரைப்படம் என்று பார்க்கவில்லை. பார்ப்பவனுக்குத்தான் பெயரும் விமர்சனமும். இவனையும் சேர்த்து மொத்தம் 6 பேர்தான். மிக்க மகிழ்ச்சி. மதிய நேரக் காட்சி என்றால் மதிய நேரக் காட்சிதான். மறுகணமே பயம் கவ்விக்கொண்டது. ஆள் இல்லை என்று காட்சி ரத்து செய்யப்பட்டால்; அவன் கதி அவ்வளவு தான். சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதே தியேட்டர்காரன் தன் கடமை உணர்ச்சியினை வெளிப்படுத்தினான். இனி 3 மணிநேரம் பிரச்சினை இல்லை. பார்வையாளனாய் மட்டும் இருந்தான். பசி என்பது ஏனோ அப்போது தோன்றவில்லை. ஆட்டம் பாட்டம் அழுகை என திரைப்படம் முடியும்போது, எந்த நிலையில் குமார் வந்தானோ அதே நிலை மாறாமல் இருந்தான். திரைப்படம் எந்த எண்ணத்தையும் தரவில்லை.

மாலை நேரம் ஆகி இருந்தது. ஆற்றைக் கடந்து தான் ஊருக்குச் செல்ல வேண்டும். மாலைநேரத் தும்பிகளாய் நண்பர்கள் கூட்டம் வைகை ஆற்றில் நிறைந்திருக்கும். அவர்களைத் தாண்டிச் செல்வது இன்று இயலாத காரியம். வீட்டிற்குச் செல்ல மீண்டும் மனம் மறுத்தது. வேறுவழி இல்லை. அதே படத்திற்கு மாலைநேரக் காட்சிக்கான 'டிக்கெட்' எடுத்தான். திரைப்படம் முடிந்து வெளியே வரும்பொழுது மதியம் முதல் மறந்திருந்த பசி மீண்டும் வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மூன்று பரோட்டா ஒரு ஆம்லேட் உதவிக்கரம் நீட்ட பசியை அடக்கினான்.

இனி எக்காரணம் கொண்டும் ஊரில் மது அருந்தக் கூடாது என்று ஒரு தட்டையான சமாதானம் செய்து கொண்டான். இருளில் மெல்ல ஊர்ந்து வீட்டிற்குச் சென்றான். தன் வீட்டிற்கு முன்னால் ஓரிருவர் நிற்பது தூரத்தில் இருந்தே தெரிந்தது. திக்கென்று இருந்தது. இன்னுமா அப்பாவிற்குக் கோபம் தணியவில்லை. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு மெல்லப் பதுங்கி நடந்தான்.

அருகில் செல்லச் செல்ல அப்பாவின் சத்தம் நன்றாகக் கேட்டது.அந்த சிறு கும்பல் தன் வீட்டின் முன் அல்ல; கணேஷின் வீட்டின் முன். 'என்னைக் குத்தம் சொல்ல நீ யாரு! நான் குடிப்பேன், என் பையன அடிப்பேன். நீ பெரிய யோக்கியன் மாதிரி வர்றே. அக்கம் பக்கத்தில என்ன பேசுறாங்கன்னு கேட்குற அல்ப புத்தி ஆளு. எனக்குப் புத்தி சொல்ல வந்துட்டான்' - காலையில் அடிபட்ட அப்பாவின் தன்மானம் இப்போது பேசிக்கொண்டிருந்தது. நன்றாகக் குடித்திருந்தார். அம்மா அங்கு இல்லை. சமாதானம் செய்து தோற்றுவிட்டாள் போல. குமார் அங்கு நிற்கவில்லை. அப்பாவின் சத்தங்களை நிராகரித்தவாறு, வீட்டையே உலகமாக நினைக்கும் அம்மாவைச் சமாதானம் செய்யலாம் என்று வீட்டினுள் சென்றான்.

அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள். அது உண்மையான உறக்கமா இல்லை கண்களை மூடிய மௌனமா என்று குமார் யோசித்தான். அவனுக்குத் தெரியும் அம்மாவைப் பற்றி. நாளை பேசிக்கொள்ளலாம். மீண்டும் மெதுவாகத் தடம் தெரியாமல் கோபி வீட்டின் மொட்டைமாடிக்குச் செல்ல நகர்ந்தான்.


நன்றி : உயிரோசை http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3007